பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை தேவை; திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி!

MsdMsd
Jun 21, 2026 - 18:15
Jun 22, 2026 - 18:16
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை தேவை; திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் திருச்சியில் இன்று பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி மாவட்டத் தலைவர் சமயபுரம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியானது சிங்காரத்தோப்பில் தொடங்கி மேலப்புலிவார்டு ரோடு, மரக்கடை மற்றும் மதுரை ரோடு வழியாக பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும் சென்றனர். 

மேலும் இப்பேரணியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை விரைந்து வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. குற்றங்களுக்குத் தூண்டுதலாக இருக்கும் போதைப்பொருட்களை தமிழக அரசு முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. 

பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நிறைவடைந்த பேரணியைத் தொடர்ந்து, கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி சிறப்புரையாற்றி, குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சம்சுதீன், அன்சர் பிலால், அமானுல்லா, காதர், சர்புதீன், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.