பிறப்பு பதிவேடுகளில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு; திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பிறப்புப் பதிவேடுகளில் குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய விடுபட்டிருப்பவர்களுக்கு, தமிழக அரசு மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதனைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் இருந்தால் மட்டுமே அது முழுமையான ஆவணமாகக் கருதப்படும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பள்ளியில் சேருதல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் வயதுச் சான்று என அனைத்துத் தேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும். திருத்தப்பட்ட தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 01.01.2000-க்கு முன் அல்லது பின் பதிவு செய்யப்பட்ட பிறப்புப் பதிவேடுகளில் பெயர் விடுபட்டிருந்தால், அதனைச் சேர்க்க கடந்த காலங்களில் அரசு பலமுறை அவகாசம் வழங்கியிருந்தது. முன்னதாக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பெயர் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்புப் பதிவேடுகளிலும் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய, அரசு தற்போது 26.09.2026 வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கீழ்க்கண்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்:- # திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை # அரசு மருத்துவமனைகள் # தொடக்க சுகாதார நிலையங்கள் # மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தையின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் கேட்டுக்கொண்டுள்ளார்.