திருச்சியில் ஆசிரியர் தின விழா; சந்தோஷ் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'மாற்றம்' அமைப்பு சார்பில் பாராட்டு!

MsdMsd
Sep 5, 2026 - 14:52
Sep 6, 2026 - 20:31
திருச்சியில் ஆசிரியர் தின விழா;  சந்தோஷ் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'மாற்றம்' அமைப்பு சார்பில் பாராட்டு!

திருச்சியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 'மாற்றம்' அமைப்பின் சார்பில் தன்னலமின்றி சேவையாற்றி வரும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்புப் பள்ளியில், முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்புப் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வி வழங்குவதுடன், அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் மகத்தான பணியினை இப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையில், ஆசிரியர்கள் லீமா தேவி, கோகுல் ராஜ் மற்றும் உதவியாளர்கள் சூர்யா, யுவராணி ஆகியோர் இச்சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியைப் போற்றும் வகையிலும், ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் விதமாகவும் 'மாற்றம்' அமைப்பின் சார்பில் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரும், நடிகரும், மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ. தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதிஷ் ஜான், சாக்ஸிடு அமைப்பை சேர்ந்த சசி, மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் ஏராளமான சிறப்பு குழந்தைகளும் பங்கேற்றுத் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்திற்காக ஆர்.ஏ. தாமஸ் இயக்கத்தில் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தில், சந்தோஷ் சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.