ஶ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார்; சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - பகுதி செயலாளர் ராம்குமார் பேட்டி!
பூலோகம் வைகுண்டம், வைணவ தளங்களில் முதன்மையான தளமாக விளங்கக்கூடிய ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பல உள்ளது. இதில் குறிப்பாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே இருக்கக்கூடிய 5 ஏக்கர் நிலப்பரப்பு சுமார் ரூபாய் 50 கோடி மதிப்புடைய இடத்தை திமுக பகுதி செயலாளர் ராம்குமார் தனது பெயரில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் திமுக பிரமுகர் ராம்குமார் மீது காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் திமுக செயலாளர் ராம் குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார். கோயில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகத்தை இன்றளவும் நடத்தி வருகிறார்கள். இந்த திமுக பிரமுகரின் மனைவி வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்த விவரங்கள் கிடைத்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களின் முயற்சியால் தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அந்த திமுக பிரமுகர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணை ஆணையர் மூலம் அந்த இடத்தில் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என சார் பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. விரைவில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு இதற்கு பின்னால் இருக்கும் முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் இதில் சிக்குவார்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. திருச்சி திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திமுக பகுதி செயலாளர் ராம்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் இந்த இடத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்துள்ளேன் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இடத்திற்கு சொந்தக்காரர் ரங்கசாமி ஐயங்கார் உடைய சொத்து ஆகும். மேலும் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கையெழுத்து இட்டு பத்திரப்பதிவானது நடைபெற்றது. மேலும் இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் தெரியாமல் உயர்நீதிமன்றத்தை மதிக்காமல் யாரோ ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்கள் யார் என்று தெரியவில்லை, இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இது குறித்து மேலும் என்னால் பேச முடியாது. நான் சார்ந்திருக்கும் கட்சியில் சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்னுடைய இடத்தை பிடிப்பதற்காக செயல்படுகிறார்கள் எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்றார்.