மாட்டிறைச்சி விவகாரம்; திருச்சியில் புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் - அமைச்சர் வன்னியரசு கருத்துக்கு எதிர்ப்பு!

MsdMsd
Sep 30, 2026 - 19:19
Sep 30, 2026 - 19:19
மாட்டிறைச்சி விவகாரம்;  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் -  அமைச்சர் வன்னியரசு கருத்துக்கு எதிர்ப்பு!

தமிழக அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் பாலு வர்மன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டிறைச்சியையும் உணவுப் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

சமூகநீதி விடுதிகளில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வரும் நிலையில், உணவு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு கவனமாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.