சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் – தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!

MsdMsd
Oct 3, 2026 - 14:04
Oct 3, 2026 - 14:06
சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் – தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர்கள்  தமிழக அரசுக்கு கோரிக்கை!

திருச்சி ஜங்சன் பகுதியில் தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் ஜோசப் ஜான் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜராஜேஸ்வரன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், எந்தவித மாதாந்திர ஓய்வூதியப் பலன்களையும் பெறாமல் சிபிஎஸ் திட்டத்தில் பணிநிறைவு செய்த தகுதியுள்ள அனைவரும் TAPS திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளும் வகையில் தமிழக அரசு அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், TAPS திட்டத்தைத் தேர்வு செய்யாதவர்கள் மற்றும் குறைந்த பணிக்காலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அகவிலைப்படியுடன் கூடிய உரிமை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்கச் செயலாளர் ரவி, பொருளாளர் கோபண்ணசாமி, துணை தலைவர்கள் யூனஸ், சுப்பு ரத்தினம், இணை செயலாளர்கள் அன்பழகன், அருணா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் மாநிலத் தலைவர் ஜோசப் ஜான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

எங்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களது ஒற்றைக் கோரிக்கையாகும். 2007, 2008, 2009, 2011 மற்றும் 2015 ஆகிய காலகட்டங்களில் அரசு கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது வயது முதிர்வு காரணமாக பணியில் சேர்ந்த பல பேராசிரியர்கள், குறுகிய பணிக்காலத்திலேயே 2025 டிசம்பர் 31-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் எந்தவித ஓய்வூதியமும், வருமானமும், பணப்பலன்களும் இன்றி தவித்து வருகின்றனர். 01.01.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றம், எங்களைப் போன்ற ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. இதற்குப் பிறகு ஓய்வுபெற்றவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் வருகின்றனர். ஆனால், 2007, 2008, 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் எங்களுடன் சக பணியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் தற்போது அந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணப்பலன்களையும், ஓய்வூதிய நலன்களையும் பெற்று வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே, தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என நம்பிக்கை அளித்திருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்களித்தோம். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, எங்களுக்கும் வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.