கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும் – மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை!
திருச்சி உறையூர் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 9,613 கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளர்களாக பெயர் மாற்றம் செய்து, அவர்களின் பணிப்பதிவையும் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கடந்த மார்ச் 14-ஆம் தேதி மின்சார வாரியத்தில் ஊதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு, மூன்று முறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மின்சாரத்துறை அமைச்சரிடமும், மின்சார வாரியத் தலைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில், 9,613 கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் சுமார் 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் விடுபட்ட 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் 16 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்வதாக அளிக்கப்பட்ட உறுதியையும் அரசு நிறைவேற்ற வேண்டும். மின்சார வாரியத்தின் களப்பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு தடையற்ற சேவை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், ஏற்கனவே பணியாற்றி வரும் 9,613 கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டால், தங்களுடன் இணைந்துள்ள சங்கங்களும் ஆதரவு அளிப்பார்கள் என தெரிவித்தார்.