தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது - மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருந்தால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

MsdMsd
Oct 12, 2026 - 08:53
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது - மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருந்தால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மற்றும் கோவை மாநகரங்களில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாநகரில் மாரிஸ் பாலம், ரயில் நிலைய சந்திப்பு மேம்பாலம், காவிரி பாலம், எடமலைப்பட்டிபுதூர் மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் என்பதற்காகவே அவை தாமதப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், இரவு நேரங்களிலும் வியாபாரிகள் கடைகளைத் திறந்து விற்பனை செய்வது வழக்கம். அவர்களின் வியாபாரம் தடையின்றி நடைபெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை காவல்துறை வழங்க வேண்டும். வியாபாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருச்சி பஜார் மற்றும் என்.எஸ்.பி. சாலையில் தரைக்கடைகளை அகற்றும் பணியால் ஏராளமான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மனிதநேய தொழிலாளர் சங்கம் மற்றும் மனிதநேய வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கித் தரத் தமிழக அரசும் திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் மத்திய பாஜக அரசு மிகப்பெரிய நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவதும், மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதும் முக்கிய வணிகப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் மூடப்படுவதும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. கருத்து சுதந்திரத்துக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.

அரசமைப்பு சட்டத்தின்படி சுதந்திரமாக செயல்பட வேண்டிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். SIR மூலம் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அதைப் பறிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் அமையக்கூடாது. SIR நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட SIR திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும்.

காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி வடிநில மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையடைந்துள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தத் திட்டமிட்டிருப்பது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீர் திறப்பை நிறுத்துவது தொடர்பான முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, விவசாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருந்தால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், மூன்று சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும். அதேபோல், மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தின் இடைத்தேர்தல் வரலாற்றில் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தில் இருந்த திமுக கூட்டணி, இந்த முறை இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தேர்தல் சூழலில் பல்வேறு கட்சிகள் கூட்டணி மாறினாலும், மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. திமுகவின் கொள்கைகளுக்கும் பாமகவின் கொள்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் பேரணி நடத்தியுள்ளார். வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொள்கை அடிப்படையில் திமுகவும் பாமகவும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ளது.

தமிழகத்துக்கு உரிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் வரிப் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி குறைந்து வருகிறது. மாநில அரசும் மத்திய அரசும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல. மாநிலங்களுக்கான நிதி உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்கியதே காரணம். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதே உண்மையான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

நீண்டகாலமாகச் சிறையில் இருந்த கைதிகளின் விடுதலை தொடர்பாகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முயற்சியாலும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சுமார் 41 நீண்டகால சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் முஸ்லிம்கள். 20 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலையில் திமுக அரசு முக்கியப் பங்காற்றியுள்ளது.

லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊழலை ஒழிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெறும் மேடைப் பேச்சுகளாக இல்லாமல், நடைமுறையில் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக நடைமுறைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே உண்மையான ஜனநாயகமாகும் என தெரிவித்தார்.