தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி வருகிறது - மல்லை சத்யா பேட்டி!

MsdMsd
Sep 15, 2026 - 11:00
Sep 16, 2026 - 11:01
தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி வருகிறது - மல்லை சத்யா பேட்டி!

அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட வெற்றிக் கழகம் சார்பில் திராவிட ரத்னா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி காஜாமலை பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா கூறியதாவது:- 

அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை இணைத்து, திராவிட இயக்கத்தின் கருத்தியலை முன்னெடுக்கும் வகையில் திராவிட ரத்னா விருதை திராவிட வெற்றிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த காலகட்டத்துக்கு திராவிடக் கருத்தியல் தேவை என்ற நோக்கத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்ணுக்கான அடையாளமாக திராவிட ரத்னா விருது விளங்கும். விருது பெறும் ஆளுமைகள் மிக நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அந்த மாற்றங்கள் தற்போது ஏமாற்றங்களாக மாறி வருவதை பொதுமக்களின் அமைதி தெளிவுபடுத்துகிறது. தவறு செய்து விட்டோம் என மக்கள் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களது விரலால் தங்களது கண்களையே குத்திக்கொண்டதைப் போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் உணருகின்றனர். இதனால், மாற்றம் ஏமாற்றமாக முடிந்து மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் ஏன், எதற்காக, யாரால் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தியிருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தகுதி இழந்திருந்தாலோ இடைத்தேர்தல் நடைபெறலாம். ஆனால், இவ்விரண்டும் நடைபெறாத நிலையில், சுயலாபத்திற்காக ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி, 21 நாட்களுக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஜனநாயக விரோத போக்காகும். எனவேதான் தவெக கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டுள்ள ஆளுங்கட்சிக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் நாட்டு மக்கள் தக்க பாடத்தை வழங்க உள்ளனர். திராவிட வெற்றிக் கழக நிர்வாகிகள் கடந்த 12ஆம் தேதி முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது, வரும் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், இரண்டு வேட்பாளர்களின் வெற்றிக்காக களத்தில் பணியாற்றுவதாகவும் அறிவித்துள்ளோம்.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். அங்கு எதிர்க்கட்சிகளுக்கே வாக்குகள் செல்லும் நிலை உள்ளது.

திராவிட இயக்கத்தை காக்க வேண்டிய ஒரு போர்வாளாக பார்க்கப்பட்ட தலைவர் வைகோ, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் ரசிகர் மன்றத் தலைவரைப் போன்று பேசி வருவது வேதனை அளிக்கிறது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பார்த்தவர், அண்ணாவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டவர், கலைஞருடன் மேடையில் இருந்தவர் வைகோ. ஆனால், இன்று அவர் நிலை தடுமாறி படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டார். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் செப்பேடுகளில் குறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சிறப்பானவை. ஆனால், தற்போது மிகப்பெரிய அரசியல் பிழையை செய்துள்ளார். என் மீது அபாண்டமான பழியை சுமத்தினார். என்னை மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான தோழர்களையும், முன்னணி நிர்வாகிகளையும் இழந்து இன்று தனிமரமாக நிற்கிறார்.

அரசியல் என்பது கூட்டலில் தொடங்க வேண்டும். ஒருவர் இருவராக வேண்டும்; பத்து, நூறாக வேண்டும். ஆனால், மதிமுகவைப் பொறுத்தவரை மகன் வந்ததற்குப் பிறகு, உறுப்பினர்கள் கழித்தல் கணக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். எங்களைப் போன்ற பலரும் விலகியுள்ளோம் என்றால், அவரது மகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதால்தான் விலகியுள்ளோம். வைகோ மிகப்பெரிய அரசியல் பிழையை செய்துள்ளார். தற்போது அந்த கேடயம் வழவழப்பாக இல்லை; துருப்பிடித்துள்ளது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளாகும் தலைவராக வைகோ மாறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் தோல்வியடைந்தது குறித்து துரை வைகோ பேசியிருப்பது அகம்பாவத்தின் உச்சம். துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பாக, மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வேண்டும் எனக் கேட்டார். பின்னர், வைகோவுக்குப் பிறகு மதிமுகவை திமுகவுடன் இணைக்கிறேன் என பொய்யான செய்தியை கூறியவரும் துரை வைகோதான். வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யக்கூடியவர் துரை வைகோ. கார்ப்பரேட் மனநிலையுடனும், வலதுசாரி சிந்தனையுடனும் செயல்படும் அவர், வெற்றிக்காக களம் ஆடிய திமுகவை கொச்சைப்படுத்தியுள்ளார். அவரை திமுகவினரும் பொருட்படுத்தவில்லை; தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை. அவர் இன்று நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார்.

சமீப காலங்களில் ஜனநாயக நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறியுள்ளது. கேள்விகள் கேட்கும் மன்றமாக இல்லாமல், கேளிக்கை மன்றமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடும் மாறியுள்ளது. பொறுப்புணர்வுடன் முதலமைச்சர் பேசாமல் இருந்தது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். எதற்கெடுத்தாலும் ஒற்றைக் காரணத்தை வைத்துக்கொண்டு நகரும் இந்தப் போக்கு சரியானதல்ல.

கடந்த காலங்களில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த திருமாவளவன், திமுக - பாஜக இடையே உறவு இருந்ததாக அவதூறாகப் பேசியுள்ளார். தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக அவர் இதுபோன்று பேசலாம்.

முதல்வரின் லண்டன் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு கிடைத்து, மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்றால் நன்றாக இருக்கும். கடந்த காலத்தில் தொழில் வளர்ச்சியில் 6-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது ஏறக்குறைய 14-வது இடத்துக்குச் சென்றுள்ளது. இந்த 120 நாள் ஆட்சியில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. பொருளாதாரம், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது. இதனை மீட்பதற்கு வெளிநாட்டுப் பயணம் உதவக்கூடியதாக இருந்தால், அதனை வரவேற்கலாம் என தெரிவித்தார்.