7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்!

MsdMsd
Oct 13, 2026 - 19:09
Oct 14, 2026 - 19:10
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்!

2026 ஏப்ரல் முதல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும், 2013, 2016, 2019, மற்றும் 2023 ஆகிய ஒப்பந்த பலன்களை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி அடிப்படை பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும், இரண்டு விதமான டி.ஏ கணக்கு முறையை மாற்றி அனைவருக்கும் ஒரேமாதிரியான டி.ஏ கணக்கீடு செய்து முறைப்படுத்த வேண்டும், வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை 12 (3) ஒப்பந்த அடிப்படையில் பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி - கரூர் மண்டலம் சார்பில், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி புறநகர் கிளை முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.