ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ, பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது!
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி முழுவதும் ஆயுத பூஜைக்கு தேவையான பழங்கள்,பொறி, கடலை, பூக்கள் போன்ற பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், கரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் விழா காலங்களில் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முதலே மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் கூடி, தங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பண்டிகை காலம் என்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக 1 கிலோ ஆப்பிள் 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 250 ரூ விற்பனை செய்யப்பட்டது. மாதுளை கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 300 ரூபாய்க்கு விற்பனையானது. சாத்துக்குடி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 120 ரூபாய்க்கு விற்பனையானது. பன்னீர் திராட்சை கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 250 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்களை பொறுத்தவரை மல்லிகை ஒரு கிலோ ₹.800-1000, கனகாம்பரம் ₹.700, முல்லை ₹.800, பன்னீர் ரோஸ் ₹.200-220, ஆப்பிள் ரோஸ் ₹.330, செவ்வந்தி ₹.350 - 400, சம்பங்கி ரூ.350-400, அரளி ₹.500, கோழி கொண்டை ₹.40-50, என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆயுத பூஜை காலகட்டங்களில் வீடுகளில் வைக்கப்படும் விளாம்பழம், கரும்பு போன்ற பொருட்களும் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அலங்கரிக்கும் வாழைக்கன்றுகள், மா இலை தோரணம் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.