தீபாவளி வியாபாரத்திற்கு அனுமதி கோரி, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தரைக்கடை தொழிற்சங்கத்தினர்!
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் கடந்த பல வருடங்களாக 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்ட நிலையில், இது நாள் வரை அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள சூழலில், அங்கு முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு மட்டும் அந்த 15 நாட்களுக்கு என்.எஸ்.பி. ரோட்டில் தற்காலிகமாகக் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துத் தரைக்கடை தொழிற்சங்கத்தினர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொது செயலாளர் ஜீவா கூறுகையில்:-
இந்த 15 நாட்களில் வியாபாரிகள் சம்பாதித்துத் தங்களது வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்வார்கள் என்பதால், நாங்கள் இந்த வயிற்றுப் பசியுடன் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை இந்த கோரிக்கை மறுக்கப்பட்டால், என்.எஸ்.பி. சாலையில் தினசரி போராட்டம் நடத்தி, கடை போடும் வரை அதைக் கைவிட மாட்டோம். மேலும் தீபாவளி முடிந்த பிறகு கடையை காலி செய்து விடுவோம் என எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்க தயாராக உள்ளோம். இதற்கு மாநகராட்சி ஆணையரோ, அதிகாரிகளோ எந்த பதிலும் வழங்கவில்லை என தெரிவித்தார்.