கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்காததற்கு பாஜகவில் உள்ள முக்கிய புள்ளிகளே காரணம் - பாதிக்கப்பட்ட பெண் திவ்யா சேஷாத்ரி பேட்டி!

MsdMsd
Nov 6, 2026 - 07:42
கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்காததற்கு பாஜகவில் உள்ள முக்கிய புள்ளிகளே காரணம் - பாதிக்கப்பட்ட பெண் திவ்யா சேஷாத்ரி பேட்டி!

பெங்களூருவை சேர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகி திவ்யா சேஷாத்ரி என்ற பெண்ணை, பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பு முருகானந்தத்தின் மீது, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாற்றியது, மிரட்டுவது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கருப்பு முருகானந்தத்திற்கு முன் ஜமின் வழங்க மறுத்தது. அதன் பின்பும் அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் திவ்யா சேஷாத்ரி கருப்பு முருகானந்தம் கைது செய்யப்படாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு பெங்களூரில் சொத்துப் பிரச்சினை இருந்தபோது பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருந்த கருப்பு முருகானந்தம் அறிமுகமானார். அந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி என்னுடன் பழகியவர், என்னைத் திருச்சியில் குடியமர்த்தினார். ஆரம்பத்தில் அவருக்குத் திருமணம் முடிந்தது எனக்குத் தெரியாது; பின்னர்தான் தெரியவந்தது. இருப்பினும், அவரது குடும்பத்துடனும் நான் நட்புடன் பழகினேன்.

ஆனால், நாளடைவில் எனது சொத்துகளை அபகரிக்க முயல்வதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை அடிமைப்போல நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்தே கட்சி ரீதியாகவும், பின்னர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தேன். என் புகாரின் பேரில், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கில் கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தும், தலைமறைவாக இருந்த அவரைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 40 நாட்களுக்கு மேல் சுதந்திரமாக சுற்றித் திரிந்த அவர், தற்போது உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

பாஜகவில் உள்ள முக்கியப் புள்ளிகள், குறிப்பாக அவரது சொந்த ஊரான முத்துப்பேட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் அவருக்குப் பின்னணியில் இருந்து ஆதரவு அளிப்பதாலேயே காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.

முதல்வர் விஜய் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; கருப்பு முருகானந்தம் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.