பாஜக திருச்சி மாவட்ட அலுவலகத்தில் காவலாளி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு; தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை!

MsdMsd
Oct 14, 2026 - 19:12
பாஜக திருச்சி மாவட்ட அலுவலகத்தில்  காவலாளி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு; தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை!

திருச்சி மாநகரம் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், தனியார் பாதுகாப்பு ஏஜென்சி மூலமாக திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்த கணேசன் (60) என்பவர் கடந்த ஒரு வாரமாக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அலுவலகத்திற்கு வருகை தர இருந்ததையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக எஸ்கார்ட் போலீசார் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த காவலாளி கணேசன், போலீசாருக்கு அலுவலகக் கதவைத் திறந்துவிட்டு அவர்களை அமர வைத்தப் பிறகு, மேல்தளத்திற்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில், அவர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த போலீசார், கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருப்பதைக் கண்டனர். இச்சம்பவம் குறித்து எஸ்கார்ட் போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு மருத்துவமனை போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவலாளி கணேசன் எதற்காக இரண்டாவது மாடிக்கு சென்றார்? அவர் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.