ஜனநாயக அமைப்புகளின் மீது அவதூறு; பாஜகவின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் - மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

MsdMsd
Oct 24, 2026 - 08:49
Oct 24, 2026 - 17:04
ஜனநாயக அமைப்புகளின் மீது அவதூறு;  பாஜகவின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் - மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதற்குப் பதிலளிக்கும் வகையிலும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 5 வரை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பிரச்சார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக மாவட்டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது குறித்தும், எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை அம்பலப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் தெரிவித்ததாவது:- 

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாகப் புதிய பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று தொடங்கி வரும் நவம்பர் 5-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 30-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெறும். நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சில அரசியல் அமைப்புகளும் வெளிநாட்டு சக்திகளின் இயக்கத்தின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட முறையில் தவறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, எந்தவிதத் தவறும் நடக்காத எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்தும் கூட, தேவையற்ற போராட்டங்களை முன்னெடுத்து மாணவர்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற கேரளா மாநிலத்திலேயே எஸ்.ஐ.ஆர். முறையினால்தான் வெற்றி பெற்றோம் என்று அந்த மாநில முதல்வரும் அமைச்சர்களும் கூறியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் தோல்வியடைந்த திமுகவும் அதன் தலைவரும் இதைக் காரணம்காட்டி 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகப் பொய்ப் புகார்களைக் கூறி வருகின்றனர். அந்த 13 கோடி பேரில் சுமார் 2 கோடி பேர் இறந்தவர்கள் ஆவர். இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. திமுக ஆட்சி காலத்தில்தான் இறந்தவர்கள் பெயரில் வாக்குரிமை வழங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. மேலும், தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எஸ்.ஐ.ஆர். காரணமாகத் தனது பெயர் விடுபட்டது என்று கூறி இதுவரை யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. மத்திய அரசைப் பலவீனப்படுத்தவும், நாட்டின் இறையாண்மையைக் குலைக்கவும் முயலும் எதிர்க்கட்சிகளின் சதியை முறியடிக்க அறிஞர்களைச் சந்திப்பது, மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துவது மற்றும் இளைஞர்களை இணைப்பது போன்ற பல்வேறு செயல்திட்டங்கள் மூலமாக இந்தப் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படும். தமிழக பாஜகவின் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கென ஏழு பிரிவுகளாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்தியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்ற உண்மையை தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு சேர்ப்போம் என்றார்.