வேட்புமனு தாக்கல் செய்ய நேரில் வரவேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே விஜய் திருச்சி வந்துள்ளார்; காவிரி தண்ணீரை ஒரு முடக்கு கூட குடித்து பார்க்காத ஒருவரை எப்படி மண்ணின் மைந்தனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பேட்டி!
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், இன்று மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு, இபி சாலையில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் மலைக்கோட்டை பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் வேட்பாளர் ராஜசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
நான் வெற்றி பெற்றால் திருச்சி கிழக்குத் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி, திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரியான தொகுதியாக உருவாக்குவேன். மக்களோடு மக்களாக என்றும் நான் இருப்பேன். திருச்சி கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் வர்க்கம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. ஆகையால் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நிச்சயம் நான் உறுதுணையாக இருப்பேன். காந்தி மார்க்கெட் இடம் மாற்றுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல விஜய் பனையூர் பண்ணையார் தான். ஒரு வேட்பாளர் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே, தனி விமானம் திருச்சி வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் விஜய். தபால் மூலம் அல்லது இணையவழியில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்ற விதிகள் இருந்தால் விஜய் திருச்சிக்கு நேரில் வந்திருக்க மாட்டார். பாரம்பரியமான காவிரி தண்ணீரை ஒரு முடக்கு கூட குடித்து பார்க்காத ஒருவரை எப்படி மண்ணின் மைந்தனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். விஜய் பனையூர் பண்ணையார் தான். இந்நேரம் பனையூரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார். மக்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.
ஜோசப் விஜய் குறித்து நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. கரூர் சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டார். நேற்று மரக்கடையில் நடைபெற்ற விஜய் பிரச்சாரத்தில் ஒரு காவலரின் கால் உடைக்கப்பட்டுள்ளது. தொகுதி வேட்பாளராக நான் நேரில் சென்று காவலரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால் வேட்பாளர் என்ற முறையில் காவலரை விஜய் சென்று பார்க்கவில்லை. இதுபோல எதற்கும் வராத ஒரு வேட்பாளரை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.