மக்களோடு மக்களாக லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் - தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று லால்குடி தொகுதிக்கு உட்பட்ட அப்பாத்துரை, தண்டாங்கோரை, பம்பரம் சுற்றி, மயிலரங்கம், கூகூர், எசனைகோரை, திருமண மேடு, பச்சாம்பேட்டை, இடையாற்று மங்கலம், ஆனந்தி மேடு, சாத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து, திமுக அரசின் ஊழல்கள் மற்றும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர் லீமா ரோஸ் மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் லீமா ரோஸ் பேசுகையில்,...
லால்குடி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமைய அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். லால்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும், சுரங்கப்பாதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் சென்டர் அமைத்து தரப்படும், பெண்கள் முன்னேற்றத்திற்காக சொந்த செலவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும், அனைத்து ஊராட்சிகளிலும் பெண்களுக்கு கழிப்பறை கட்டித் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக, பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.