திருச்சியில் விஜயின் தனி விமானத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!
காரைக்குடியில் பிரச்சாரம் முடிந்து சென்னை செல்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதனையொட்டி திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தேர்தல் நேரம் என்பதால் அனைவரது வாகனங்கள் மற்றும் தனி விமானங்களை சோதனை இடுவது வழக்கம். அந்த வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜயின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவலர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்தியாளர்களை சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.