மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது ; நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - வாக்களித்த பின் அமைச்சர் நேரு பேட்டி!

MsdMsd
Apr 23, 2026 - 21:13
Apr 25, 2026 - 21:13
மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது ; நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - வாக்களித்த பின் அமைச்சர் நேரு பேட்டி!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் 2787 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குபதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு தில்லை நகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு, இயந்திரம் பழுது காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு தற்போது வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சுமார் 50 நிமிடங்கள் காத்திருந்து அமைச்சர் நேரு வாக்குப்பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,...

தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த தேர்தல் எந்த வகையிலும் சவாலாக இல்லை. எப்பொழுதும் போல் தான் உள்ளது. ஊடகங்கள் தான் இந்த தேர்தலை சவாலான தேர்தல் என வெளியிட்டு வருகிறார்கள். திருச்சி கிழக்கு தொகுதியில் நிச்சயமாக உதயசூரியன் தான் வெற்றி பெறும். 9 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. டெல்டா மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. எங்களுடைய இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து உள்ளோம். மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது நிச்சயம் 200 தொகுதுகளில் வெற்றி பெறுவோம் என்றார்.