மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்துடன் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:--
கவர்னர் என்பவர் இந்திய நாட்டினுடைய அரசியல் சட்டப்படியே செயல்பட வேண்டும். அவருக்கென்று எந்த தனி அதிகாரமும் கிடையாது. ஒரு காலத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருந்தது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கிற்கு பின்னால் எந்த உரிமையும் இல்லை. அதை புரிந்து கொள்ளாமல் அந்த அதிகாரம் இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை, போலி பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதை உடைக்க வேண்டிய கடமை இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. எப்போது ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை கட்சியாக வந்திருக்கிறதோ, அவர்களை அழைத்து சட்டமன்றத்திற்கு உள்ளே தான் மெஜாரிட்டியை நிரூபிக்க சொல்ல கவர்னருக்கு உரிமை உள்ளது. அதைவிடுத்து தன்னுடைய வீட்டிற்கு வர சொல்லுகிற உரிமை அவருக்கு இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்னர் அவமானப்படுத்தியுள்ளார். இந்த தவறுகளை திருத்திக் கொண்டு இன்று மாலைக்குள் நல்ல அறிவிப்பை கவர்னர் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்தார்.