மகளிர் உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாற்றம் அமைப்பின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை!

MsdMsd
May 16, 2026 - 07:59
மகளிர் உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாற்றம் அமைப்பின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைந்திருக்கும் புதிய அரசிற்க்கும், தமிழக முதல்வருக்கும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் மாற்றம் அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-- 

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 200யூனிட் இலவச மின்சாரம், மகளிர் சிறப்பு பாதுகாப்பு படை, பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை, போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு ஊழல் இல்லாத அரசாக இயங்கும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற கட்சியினர் தலையீடுகள் இல்லாமல் நேர்மையான அரசாக இயங்கும் என்று உத்தரவாதம் அளித்து செயல்பட்டு வரும் தழிழக முதல்வர் C.ஜோசப் விஜய்க்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை 1000 ஆயிரம் ரூபாயை உயர்த்தி 2500 ரூபாயாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது, எனினும் இந்த மகளிர் உரிமை தொகையானதை முறைப்படுத்தி உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க மாற்றம் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

மகளிர் உதிவித்தொகையினை முறைப்படுத்த சில ஆலோசனைகள்:--

1) சொந்த வீடு சொத்துக்கள் உள்ள நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

2) குடும்பத்தில் கணவரோ, மகனோ, மகளோ அரசு பணியில் இருந்தால் வழங்க கூடாது.

3) குடும்பத்தில் உள்ள நபர்கள் வருமான வரி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்க கூடாது.

4) ஓய்வூதியம் பெரும் குடும்பத்தினருக்கு வழங்க கூடாது.

5) கார் மற்றும் இதர சொகுசு வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வழங்க கூடாது.

தற்போது வழங்கபடும் மகளிர் உதவி தொகை பயனாளிகளை ஆய்வு செய்து முறைப்படுத்தினால் தகுதி உள்ள மகளிர்க்கு உதவி தொகை கிடைப்பதுடன், அரசுக்கும் பலன் தரும். ஆகவே தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.ஏ.தாமஸ் மற்றும் நிர்வாகிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.