திருச்சி BHEL ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் - உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக் கோரிக்கை! ​

MsdMsd
May 29, 2026 - 14:01
May 29, 2026 - 16:00
திருச்சி BHEL ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் - உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக் கோரிக்கை! ​

நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த திருச்சி பெல் (BHEL) ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். ​

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கபிலர் தெருவைச் சேர்ந்த G. நித்யானந்தம் என்பவர் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-- ​

கடந்த 2017-ஆம் ஆண்டு, 'நியோ மேக்ஸ்' (Neo Max) என்ற நிதி நிறுவனத்தின் கிளையை நடத்தி வந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி R. சுகன்யா ஆகியோர் என்னை சந்தித்தனர். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என அவர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறினர். ​அவர்களின் பேச்சை நம்பி நானும், எனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மூலமாக சுமார் ரூபாய் 2.50 கோடி வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம். ​

முதலீடு செய்த பணத்திற்கு உரிய லாபத்தையோ அல்லது அசல் தொகையையோ தராமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த தம்பதியினர் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் கடந்த 2024-ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் (EOW) புகார் அளித்துள்ளோம். ​

மோசடிப் புகாரில் சிக்கிய ரமேஷ் தற்போது திருச்சி BHEL நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். ​இவர் எங்களை மட்டுமன்றி, இதேபோல் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ​மோசடி செய்த பணத்தைக் கொண்டு ரமேஷ் - சுகன்யா தம்பதியினர் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ​

பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள ரமேஷ் மற்றும் சுகன்யா மீது காவல்துறை இதுவரை எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடிக்கும், மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம் ​

மேலும், நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை காவல்துறை விரைந்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், அசல் தொகையும் திரும்பக் கிடைக்க ஊடகங்கள் வாயிலாக அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுக்கிறோம் என வேதனையுடன் தெரிவித்தார்.