திருச்சியில் சோலார் பேட்டரி ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்திற்கான மூன்று நாள் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி!
இந்தியாவின் முன்னணி சூரியசக்தி அமைப்புகளில் ஒன்றான சோலார் பெஸ் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் சார்பில், நாடு முழுவதும் உள்ள சோலார் டெவலப்பர்களுக்கான சிறப்பு 3 நாள் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி வகுப்பு, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. அசோசியேசன் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அசோசியேசன் தேசிய ஆலோசகர் சலீம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் சோலார் டெவலப்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். *தொடர்ந்து சோலார் பெஸ் டெவலப்பர் அசோசியேஷன் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-* தற்போது பெரும்பாலான சோலார் கட்டமைப்புகள் 'ஆன்-கிரிட்' (On-Grid) முறையில் மட்டுமே அமைக்கப்பட்டு வரும் நிலையில், 'ஆஃப்-கிரிட்' (Off-Grid) முறையில் பேட்டரி ஸ்டோரேஜ் எனர்ஜியை எவ்வாறு மிகத் திறம்படக் கையாள்வது என்பது குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படவுள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய அளவிலான டெவலப்பர்கள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள உள்ளூர் டெவலப்பர்களும் பயன்பெறும் வகையில் இந்தத் தனித்துவமான பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்தை எவ்வாறு மிகவும் எபிசியன்ட்டாக இயக்குவது மற்றும் பராமரிப்பது என்பது குறித்தும், ஆஃப்-கிரிட் பேட்டரி அமைப்புகளில் அன்றாடம் ஏற்படும் சிறிய தொழில்நுட்பப் பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிந்து, எளிதாகச் சரிசெய்வது என்பது குறித்தும், சூரியசக்தி மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் துறையில் ஆழமான அனுபவமும், உலகளாவிய தொழில்நுட்ப அறிவும் கொண்ட முன்னணி நிபுணர் ஒருவர் இந்த 3 நாள் பயிற்சியை முழுமையாக வழிநடத்தவுள்ளார். இந்தியாவில் சோலார் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், பேட்டரி ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் பற்றிய முறையான விழிப்புணர்வு அவசியமாகிறது. டெவலப்பர்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து, அவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதே இந்த 3 நாள் மாஸ்டர் கிளாஸ் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தனர்.