அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை; தமிழக அரசியலில் மோடி ஃபோபியா நிலவுகிறது - ராமசீனிவாசன் பேட்டி!

MsdMsd
Jun 8, 2026 - 20:16
அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை; தமிழக அரசியலில் மோடி ஃபோபியா நிலவுகிறது - ராமசீனிவாசன் பேட்டி!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், திருச்சியில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :-

மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்திற்கு செய்துள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும். அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியது தேசியத்தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவுக்கு வந்த விஷயம். அவர் அரசியல் கட்சி தொடங்காமல் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளதால் சிலர் அதில் இணைந்தாலும், அதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழக அரசியலிலும் இதனால் பெரிய மாற்றமோ, ஆட்சி மாற்றத்திற்கான சூழலோ உருவாகாது . பாஜக – திமுக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லி அரசியலில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் பேசுவது இயல்பானது. திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளுடனும் நல்லுறவு இருப்பதாகவும், தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என தெரிவித்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் டெபாசிட் இழந்திருப்பார்கள். காங்கிரஸ் நன்றி மறந்த கட்சி. பாஜக தியாகம் செய்யும் கட்சி. தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு போதிய அனுபவம் இல்லை , வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்தும் இதுவரை வெளியிடவில்லை . மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் மற்றும் கொலைகள் குறையவில்லை , இந்த அரசு தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது . அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் அது அவர்களது கட்சியின் பிரச்சினை , அதை அவர்களே சரிசெய்துக் கொள்வார்கள் தமிழக அரசியலில் "மோடி ஃபோபியா" நிலவுவதாக கூறிய ராம சீனிவாசன், "எதைப் பார்த்தாலும் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் காரணமாகச் சொல்கிறார்கள்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார். விஜய் முதலமைச்சரானதற்கும், அண்ணாமலை தனி இயக்கம் தொடங்கியதற்கும், வைகை ஆற்றில் தண்ணீர் வராததற்கும், திருச்சியில் மழை பெய்யாததற்கும் கூட மோடியையே காரணம் எனச் சொல்வது போன்ற நிலை உள்ளது என நக்கலாகப் பேசினார்.