திருச்சி கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!

MsdMsd
Jun 17, 2026 - 14:00
திருச்சி கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!

திருச்சி மாநகருக்கு உட்பட்ட கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், ராமகிருஷ்ணா நகர் மற்றும் டோல்கேட் ஆகிய பகுதிகள் இணையும் இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது.

இப்பகுதியில் மதுக்கடை அமைந்திருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மாலை வேளைகளில் வேலை முடிந்து திரும்புபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எனப் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில், மது அருந்திவிட்டு போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களால் பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மேலும், இப்பகுதிக்கு அருகிலேயே பள்ளிவாசல் அமைந்துள்ளதால், தொழுகைக்குச் செல்வோரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே இந்த மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் கடையின் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளுடன் சுமூகமான உடன்பாடு எட்டப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.