விஜயபாஸ்கர் ராஜிநாமா அதிர்ச்சி அளிக்கிறது; எம்ஜிஆர் ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது - திருமாவளவன் எம்பி பேட்டி!
சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:---
தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடன் சுமை 10 லட்சம் கோடியைத் தாண்டி 13 லட்சம் கோடியாக இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு
இதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும், இதில் கருத்து சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஒரு மாத கால ஆட்சி, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட போது...
6 மாத காலம் பொறுத்திருந்து, அதன் பிறகு ஆட்சி குறித்த விமர்சனங்களை வைப்போம் என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் எடுத்துள்ளனர். எனவே, ஒரே மாதத்தில் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்தவொரு மதிப்பீட்டையும் சொல்ல இயலாது. இப்போது அவர்களுக்கு அது ஒரு கற்றுக்கொள்ளக்கூடிய காலம் என்பதால், இந்த ஒரு மாத கால ஆட்சி பற்றி தற்சமயம் மதிப்பீடு செய்ய முடியாது என்றார்.
அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு...
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை; இது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு உள்ளே என்ன நெருக்கடி என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும். மேலும், அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதைப் பலமுறை கூறியுள்ளேன். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது என்று தெரிவித்தார்.
விசிகவைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் புதிய கட்சி ஆரம்பித்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடப் போவதாக வார இதழில் வெளியான நேர்காணல் குறித்த கேள்விக்கு...
அந்த வார இதழுக்கு ஏதோ தனிப்பட்ட உள்நோக்கம் உள்ளது; அது முற்றிலும் தவறான தகவல். ஷாநவாஸ் தலைமையோடு தொடர்பில்தான் இருக்கிறார். வெளிநாடு சென்றுவிட்டு தற்போதுதான் திரும்பியுள்ளார், விரைவில் என்னைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்கு இருக்கும் ஒரே வருத்தம், கட்சி முடிவுகளைக் கலந்து பேசி எடுக்கவில்லை என்பதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. வன்னி அரசு அமைச்சரான போதும் ஷாநவாஸ் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி ஏற்கும் விழாவின் போது அவர் தாமதமாக வந்ததால் அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், திட்டமிட்டு ஒரு சில ஊடகங்கள் திரும்பத் திரும்ப விடுதலைச் சிறுத்தைகளைக் குறிவைத்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. எளிய மக்களுக்கான இந்த இயக்கத்தை உடைத்து அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று விளங்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.
தவெக-வில் விசிக அமைச்சர்கள் இடம்பெற்றதில் ஷாநவாஸிற்கு விருப்பம் இல்லையா, தேர்தலுக்கு முன்பே தவெக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அவர் கூறினாரா என்ற கேள்விக்கு....
அவர் அந்த மாதிரி எதுவும் சொல்லவில்லை; அந்த நிலைப்பாட்டில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சிக்குள் சிலர் வெளிப்படையான விமர்சனங்களை வைப்பதை கண்டிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர் முன்வைக்கிறார். அவ்வாறு விமர்சனம் வைத்த பொறுப்பாளர்களை நான் ஏற்கனவே கடுமையாகக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு சிலர் பூதாகரப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டைப் பாதுகாப்பதற்கு விசிகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு விசிக தமிழ்நாட்டுக்கு எதிரான கட்சியா என்பது விளங்கவில்லை. ஒரே ஒரு நாளிதழும், வார ஏடும் மட்டும்தான் திரும்பத் திரும்ப இதைச் செய்து கொண்டிருக்கின்றன. கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை, எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.