We The Leaders - அமைப்பில் உறுப்பினர்கள் இணைப்பு விழா - மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அணிவகுப்பு!
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும், பொது அமைப்புகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 'வி தி லீடர்ஸ்' அமைப்பில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருச்சி உறையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏ.எஸ்.கார்த்திகேயன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு, தங்களை முறைப்படி 'வி தி லீடர்ஸ்' அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்த உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, "மாறுவோம் - மாற்றுவோம்" என்ற முழக்கத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் 'வி தி லீடர்ஸ்' அமைப்பு முக்கியப் பங்காற்றும் என்பதை இந்நிகழ்வு பறைசாற்றியது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வரும் ஜூலை 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மாநில அளவிலான மாநாட்டில், திருச்சியிலிருந்து பெருந்திரளான உறுப்பினர்கள் கலந்துகொள்வது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், இந்த நிகழ்வின்போது 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தமிழகத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் அவரது ஆளுமைப் பண்புகள் குறித்து உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. அண்ணாமலையின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில் தங்களின் செயல்பாடுகள் இருக்கும் என உறுப்பினர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.