தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த ஆண்டுகளை நிரந்தர பணிக்காலமாக சேர்த்து, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை!

MsdMsd
Jul 25, 2026 - 20:28
தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த ஆண்டுகளை நிரந்தர பணிக்காலமாக சேர்த்து, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை!

தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பச்சையப்பன், அபிமன்யு, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், நாராயணன், மணிவண்ணன், விசுவநாதன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். ஆனால், 45 வயதில் பணியில் சேர்ந்த பலருக்கு, ஆரம்பத்தில் 7 ஆண்டுகள் தொகுப்பூதிய காலத்திலேயே கழிந்து விடுகிறது. இதனால் அவர்கள் 52 அல்லது 58 வயதில்தான் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் பணிக்காலம் 6 முதல் 8 ஆண்டுகளாக மட்டுமே கணக்கிடப்பட்டு ஓய்வூதியம் மறுக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தையும் பணிக்காலமாகக் கணக்கிட்டு, அவர்களை ஓய்வூதியப் பட்டியலில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் குடும்ப நல மருத்துவ காப்பீட்டுக்காகத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட போதிலும், அத்திட்டத்தில் சிலர் மட்டுமே பயன்பெற்றனர். மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்தே அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக அடிக்கடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.