பழனி கோவில் நில அபகரிப்பு போல திருச்சியிலும் புகார் ; திருச்சி அருகே கோவில் நிலங்களை தனிநபர்கள் 13 ஆண்டுகளாக ஆக்கிரமித்து உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருச்சி, தொட்டியம் அருகே கிடாரம் கிராமத்தில் கோவில் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டு, அவர்கள் அந்த நிலங்களை அனுபவித்து வருவதாகவும், அந்த நிலங்களை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கிடாரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் உள்ளன. யூ.டி.ஆர். பதிவின்போது ஏற்பட்ட தவறால், அந்த நிலங்கள் தனிநபர்கள் பெயரில் பட்டா செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தனிநபர்கள் கோவில் நிலங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மலிங்கம்
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டதாகவும், வழக்கு விசாரணையின்போது திருச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர், சம்பந்தப்பட்ட நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை என நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவில் நிலங்கள் தொடர்பாக தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், இன்றுவரை சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களுக்கான பட்டா ரத்து செய்யப்படவில்லை என்றும், இதுதொடர்பாக கடந்த 13 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கோவில் நிலங்களை மீட்டு, பட்டாவை ரத்து செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இதுதொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தர்மலிங்கம் தனது மனுவில் தெரிவித்துள்ளார். பழனி கோவில் நிலம் அகபரிப்பு போலவே திருச்சியிலும் கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.