திருச்சி உறையூரில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி - 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

MsdMsd
Aug 17, 2026 - 10:54
திருச்சி உறையூரில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி - 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில், 6-வது மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் உறையூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மற்றும் புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எழில்மாறன் செல்வேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரட்டைக் கம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு, குழுப் போட்டிகள் ஆகிய பிரிவில் நடைபெற்ற இப்போட்டிகளில் தென்காசி, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிலம்பப் பயிற்சி பெற்ற 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாலை நடைபெற்ற பிரம்மாண்டமான பரிசளிப்பு விழாவில், சேஷா அய்யங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். குறிப்பாக, ரொக்கப் பரிசு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனரும், தலைமைப் பயிற்சியாளருமான சிலம்ப ஆசான் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தின் சிறப்பை உலகறியச் செய்வதோடு, இளம் தலைமுறையினரிடம் சிலம்பக் கலையின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.