திருவெறும்பூர் சமுத்தி குளம் ஆக்கிரமிப்பு; விரைவில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் - விவசாயிகள் அறிவிப்பு!

MsdMsd
Aug 17, 2026 - 22:37
திருவெறும்பூர் சமுத்தி குளம் ஆக்கிரமிப்பு; விரைவில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் - விவசாயிகள் அறிவிப்பு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சமுத்திக்குளத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, ஆகாயத் தாமரை மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

சமுத்திக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரை படர்ந்தும், சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்தும் இருப்பதால், குளத்தில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயத்திற்கு தேவையான நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளத்தின் நடுப்பகுதியில் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருவெறும்பூர் வட்டாட்சியரிடமும், ஜூலை 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜூன் 30-ஆம் தேதி அதிகாரிகள் நில அளவீடு செய்து எல்லைக் கற்களை நட்டனர். அதன் பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சமுத்திக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஆகாயத் தாமரை மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, குளத்தை முழுமையாகச் சீரமைத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.