பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநகர செயலாளருமான பெர்ஜித் ராஜன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள் சிராஜுதீன், வேளாங்கண்ணி, அமல் சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர்/ மாவட்ட செயலாளருமான நீலகண்டன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகரத் தலைவர் ஹக்கீம் அலி, மாவட்ட துணை தலைவர் ஐசக் டேவிட், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தாமஸ் ராக்லண்ட், மாநகர பொருளாளர்கள் காட்வின் பிரசன்னா, கீதா மூக்கையன், மாவட்ட துணை தலைவர் ஜேம்ஸ் மற்றும் அருண்குமார் உள்பட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:--
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். 1.76 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணிகளுக்கு நெருக்கடியாக உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்காக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்குப் பணியாற்றிய ஆண்டின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 90% பெண் ஆசிரியர்களைப் பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். 2006 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிலவிவரும் ஊதிய முரண்பாடுகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியை விட நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைந்துள்ளதால், மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்கருதி உடனடியாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் திருச்சி மாநகராட்சியில் 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தெரிவித்தார்.