காலியாக உள்ள 1500 ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்!

MsdMsd
Aug 20, 2026 - 20:02
காலியாக உள்ள 1500 ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்!

ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - திருச்சியில் அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்.

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் திருச்சியில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜான்பால், வேலாயுதம், பழனிச்சாமி, சிவக்குமார், ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்களது 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு பின்ன மாநில செயலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டியில்:-- 

கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களது 21 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் எங்களது கோரிக்கைகள் தற்போது தேக்க நிலையில் உள்ளன. இதுதொடர்பாக நிர்வாகிகள் மற்றும் செயலாளரை சந்தித்து, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். தற்போது ஆட்சிக்கு வந்து குறுகிய காலமே ஆனதால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒரே ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பொறியியல் பிரிவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநில அளவில் 46 உதவி இயக்குநர் பணியிடங்கள் கடந்த 6 மாதங்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளன. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அவர்களுக்கு பின்னர் பதவி உயர்வு பெற வேண்டியவர்களும் உள்ளதால், இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.