விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் வஞ்சிக்கிறது தவெக அரசு - திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!

MsdMsd
Aug 22, 2026 - 08:59
Aug 24, 2026 - 08:59
விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் வஞ்சிக்கிறது தவெக அரசு - திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு!

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதாகவும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்காமலும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டி, த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என். சிவகுமார், மகளிர் அணி மாநில இணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேசியதாவது: “விவசாயிகளின் நலனில் அதிமுகவிற்கு எப்போதும் அக்கறை உண்டு. விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள த.வெ.க. அரசு விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேகதாது அணை விவகாரத்திலும் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். வரும் காலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் அரவிந்தன், டி.ஆர். சுரேஷ்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயகுமார், கே.டி. தங்கராஜ், ஜாக்குலின், வெல்லமண்டி சண்முகம், வழக்கறிஞர் வனிதா, ஜெயலலிதா பேரவை பொன்னர், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ. அம்பிகாபதி, தென்னூர் அப்பாகுட்டி, பாலக்கரை சக்திவேல், ராஜாளி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாநில விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ப. அண்ணாவி, டி.பி. பூனாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு என்ற சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மல்லிகா சின்னசாமி, டி. இந்திராகாந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி. பாண்டியன், ராவணன், சூப்பர் நடேசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.