உதயநிதியிடமிருந்து வேற லெவல் பெர்ஃபார்மன்ஸ் எதிர்பார்க்கிறேன் - கிறிஸ்டோபர் திலக் எம்பி!

MsdMsd
Aug 27, 2026 - 20:38
உதயநிதியிடமிருந்து வேற லெவல் பெர்ஃபார்மன்ஸ் எதிர்பார்க்கிறேன் - கிறிஸ்டோபர் திலக் எம்பி!

திருச்சி மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில், மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிரிஸ்டோபர் திலக் சிறப்புப் பார்வையாளராகக் கலந்துகொண்டு கூட்டத்தைக் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கிறிஸ்டோபர் திலக் எம்பி பேசியதாவது:-

தற்போது உள்ள அமைச்சர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பட்டப்பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு,

மூன்று தலைமுறைகளைக் கொண்ட அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், இதற்கு முன்பு துணை முதல்வராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமைக்கும் தரத்தை நோக்கித்தான் விவாதங்கள் இருக்கும். தற்போது கேமராக்கள் மூலம் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நேரலை செய்யப்படுவதால், பொதுமக்களும் இளைஞர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சலூன் கடைகளில் வேலை செய்வோர்கூட சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்ப்பது புதிய மாற்றமாகும். எனினும், உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இன்னும் உயர் மட்டத்திலான விவாதங்களையும் செயல்பாடுகளையும் எதிர்பார்க்கிறேன். அப்போதுதான் சட்டப்பேரவை வாதங்களின் தரம் உயரும்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்துப்பேசியது போல, தமிழகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அடுத்த ஒரு வருடத்திற்கான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.

73 மற்றும் 74-வது சட்டத் திருத்தங்களால் மூன்று அடுக்கு ஜனநாயக கட்டமைப்பு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஆவேசத்தைக் குறைத்து, மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும். 

மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தை எப்போதுமே ஒரு பிரச்சனைக்குரிய மாநிலமாகவே பார்க்கிறது. பெரியார் மண் என்பதால் தமிழகத்தை அவர்கள் தாழ்வாகப் பார்க்கின்றனர். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு உடனுக்குடன் நிதியை விடுவித்துவிட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியைத் தாமதப்படுத்துவதோடு தொந்தரவும் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் கடைசி 100 ஆண்டுகால வளர்ச்சி பாரம்பரியத்தை அவர்கள் குறைத்துக் காட்ட முயல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.