இந்தியாவின் சுயேச்சையான அமைப்புகளில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பழைய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி!

MsdMsd
Oct 1, 2026 - 14:43
Oct 2, 2026 - 14:44
இந்தியாவின் சுயேச்சையான அமைப்புகளில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பழைய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மஜக துணை செயலாளர் ஷெரீப் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-

கட்சியின் வளர்ச்சிக்காக இன்றிலிருந்து அடுத்த மூன்று மாதங்கள் நிதி திரட்ட உள்ளோம். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை தவிர பெரிய வணிகர்கள் வசதி படைத்தவர்களிடம் நிதி பெற உள்ளோம். தவெக அரசு மாற்றம் தருவதாக அமைந்தது, ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சூழல் இருந்தது. தற்போது எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கூடம் செல்லக்கூடிய மாணவி கூட்டு பலாத்காரம் செய்யும் அளவு நிலை தமிழகத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் குற்றங்கள் இருந்தது. நாங்கள் ஆட்சி அமைத்தால் 100 நாட்களில் எந்த குற்றமும் தமிழ்நாட்டில் இருக்காது என்றார்கள். ஆனால் கடந்த கால ஆட்சிகளை விட அதிக அளவு குற்றங்கள் நடந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் அதற்கு முதலமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை. மாறாக திமுக மீது மட்டுமே குற்றம் சாட்டி திசைதிருப்பும் வேலையைதான் தவெகவினர் செய்து வருகிறார்கள், இது ஆரோக்கியமானது அல்ல. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அதற்கு திசை திருப்பாமல் பதில் அளிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தேவையில்லாமல் பழி போட மாட்டார்கள். அவர்களே தவெகவினர் இடைதேர்தலுக்கு வாக்குக்கு பணம் தருகிறார்கள் என கூறுகிறார்கள் என்றால் அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு மாற்று அரசியல் என்று கூறும் முதலமைச்சரும் அமைச்சர் ஆதவ்அர்ஜுனாவும் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

பாமக, தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக செய்திகள் வருகிறது. பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என வி.சி.க தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு அவர்கள் கூட்டணியின் தலைமையான தவெகதான் பதில் அளிக்க வேண்டும்

இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்துவதாக பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர். குதிரை பேரம் மூலம் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக - அதிமுக கூட்டணி அமைத்தார்கள் என அதிமுக அல்லது திமுகவின் தலைவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே வீண் பழிகளை சுமத்துகிறார்கள், அது ஆரோக்கியமானது அல்ல.

14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் சிறை தண்டனை கைதிகளை சாதி மதம் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தலைமை செயலாளர் தடையாக இருப்பதாக தவெக கூட்டணி கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அப்படி அது உண்மையாக இருந்தால் தலைமை செயலாளர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக நீதிபதியே கூறியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியையே சாலைக்கு வரவைத்த ஆட்சி பாஜக ஆட்சி. இந்தியாவின் சுயேச்சையான நீதி, நிர்வாக அமைப்புகளில் ஒன்றிய பாஜக தலையீடு அதிகரித்து வருவதால், ஜனநாயகமும் சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது. எனவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பழைய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், விவசாயிகளின் நலனையும் காப்பதில் எந்த அரசும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கர்நாடகா அணைகளின் மதகுகளை நேரடியாக திறக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். மேலும் அக்குழுவில் இரு மாநிலங்களையும் சாராத பிற மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.