திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அனுமதியின்றி பயிற்சி அளிப்பதாக புகார்: “அரசுக்கு முறையாக கட்டணம் செலுத்தியே பயிற்சி அளிக்கிறோம்” – நல்லுசாமி அண்ணாவி விளக்கம்!
திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தியின் கணவர் நல்லுசாமி அண்ணாவி, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசின் அனுமதியின்றி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து வருவதாக ஒரு தரப்பினர் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகார் தொடர்பாக நல்லுசாமி அண்ணாவி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில்:--
நான் சர்வதேச தடகள வீரர். இந்தியாவுக்காக சுமார் 30 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டுக்கும் திருச்சிக்கும் பெருமை சேர்த்துள்ளேன். சமீபத்தில் எங்களைப் பற்றி சில குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எங்கள் அகாடமியில் பயிற்சி பெறுபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உண்மைதான். எந்த அகாடமியில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை? அரசுக்கு முறையாக கட்டணம் செலுத்தியே நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். எங்கள் அகாடமியின் உறுப்பினர்களிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையாக தடகளப் பயிற்சி மேற்கொள்ளும் பலருக்கு நாங்கள் இலவசமாகவே பயிற்சி அளித்து வருகிறோம்.
கடந்த 33 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த சேவையை செய்து வருகிறோம். சுமார் 20 ஆண்டுகளாக சிறுவர், சிறுமிகளுக்கான போட்டிகளையும் நடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, பல்வேறு அரசு சார்ந்த வாய்ப்புகளை பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறோம். எங்கள் அகாடமியில் இதுதான் வெளிப்படையான நடைமுறை. இதில் எந்த ரகசியமும் இல்லை. எனது மனைவி மாவட்ட விளையாட்டு அலுவலராக இருப்பதால், அவரது நிர்வாகப் பணிகளில் நான் தலையிடுவதில்லை. தற்போது கூட செய்தியாளர்களை சந்திக்க ஸ்டேடியத்திற்குள் வருவதற்கு பதிலாக வெளியில் வைத்து பேட்டி அளிக்கலாம் என்றுதான் கேட்டிருந்தோம்.
மூத்தோர் தடகள சங்கம் என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அதில் நிர்வாகக் குழுவினரும், மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் உள்ளனர். சங்கம் தொடர்பான முடிவுகள் அதன் நிர்வாகக் குழுவின் மூலமே எடுக்கப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் செயலாளராக என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. சங்கத்தின் கூட்டம் அல்லது அனுமதி தொடர்பான விஷயங்களில் நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது. அது சங்கத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடையது.
ஸ்டேடியத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுவது தவறான தகவல். அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. ஆன்லைனில் ஸ்டேடியத்தை முன்பதிவு செய்தால் அதற்கான ரசீது எனது மின்னஞ்சலுக்கே வரும். அதனை பிரிண்ட் எடுத்து வழங்கும்போது சம்பந்தப்பட்டவர்கள் அதை பெற்றுக்கொண்டு பதிவில் வைத்துக் கொள்வார்கள். ஸ்டேடியத்தை பயன்படுத்துவது தொடர்பாக யாருக்கும் உரிமைகள் இருந்தால் அதை கேட்கலாம். ஆனால் அந்த உரிமையை தங்களுடைய உடைமையாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
என்னைப் பற்றியும், எனது மனைவியைப் பற்றியும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் அதிகாரியாக இருப்பது குறித்து அவமதிக்கும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து காவல்துறையே விசாரித்து முடிவு செய்யும். அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கடந்த ஆறு மாதங்களாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. வழக்கறிஞர் உள்ளிட்ட சிலர் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. யார் உண்மையில் புகார் அளித்துள்ளனர் என்பதும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒருவரின் பெயரில் புகார் அளித்துவிட்டு, பின்னால் வேறு நபர்கள் இருப்பது போன்ற நடவடிக்கைகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. புகார் அளிக்க விரும்புபவர்கள் தங்களது பெயரிலேயே புகார் அளிக்க வேண்டும்.
அண்ணா விளையாட்டு அரங்கில் கழிப்பறை உள்ளிட்ட சில வசதிகள் தொடர்பாக குறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்ற குறைகள் இருந்தால் அவற்றை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதிகள் தொடர்பாக நியாயமான கோரிக்கைகள் இருந்தால் அவற்றை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்காக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்டேடியத்தில் உள்ள குறிப்பிட்ட கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, எந்த கழிப்பறை யாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அங்குள்ள அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள்.
ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக நாங்கள் நீண்ட காலமாக பங்களித்து வருகிறோம். இதுகுறித்து இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் விளையாட்டு அமைப்புகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள். உண்மையாக தவறு இருப்பது தெரியவந்தால் அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் நல்ல விஷயங்கள் நடந்தால் அதையும் ஆதரிக்க வேண்டும். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம்; இருவரை சில நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் அனைவரையும் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அண்ணா விளையாட்டு அரங்கிற்கும், அங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு நல்லுசாமி அண்ணாவி தெரிவித்தார்.