காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி, திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு பொது செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படும் மண்டல பொறுப்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் திரவியம் ஆகியோரின் செயல்பாடுகளை கண்டித்தும், கட்சியினரை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ராஜ்ய சபா எம்பி கிறிஸ்டோபர் திலக், மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆகியோரை கண்டித்தும், காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை நியாயமான மற்றும் ஜனநாயக முறையில் நடத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்லூர் சுரேஷ், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், வரகனேரி பிலால், வழக்கறிஞர் சிக்கல் சண்முகசுந்தரம், புத்தூர் சார்லஸ், தென்னூர் மெய்யநாதன், கள்ளத்தெரு குமார், வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் கோட்டத் தலைவர்கள் காட்டூர் ஆனந்தராஜ், பாலக்கரை ஜெரால்ட், மலைக்கோட்டை ரவி, அப்துல் குத்தூஸ், பீமநகர் காசிம், பசங்க பிரதாபன், பாலக்கரை மாரியப்பன், நிர்மல் குமார், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஜெகதீஸ்வரி பரிதா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வக்கீல் சுகன்யா, சுகந்தி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிவேல், அண்ணாதுரை, ராஜா முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:--
காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் நடுநிலையான பார்வையாளரை நியமித்து, பகுதி வாரியாக இடஒதுக்கீட்டை முறையாக அறிவிக்க வேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினருக்கான இடங்கள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தெளிவாக அறிவித்து, வெளிப்படையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் மீது உண்மையான பற்றுக்கொண்ட தொண்டர்கள் கட்சி வளர்ச்சிக்காக முழுமையாகப் பணியாற்றும் சூழல் உருவாகும் மேலும் உட்கட்சி ஜனநாயகம் நிலைநாட்டப்படும். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் நெடுஞ்செழியன், தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வராத கட்சித் தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதாக மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. நடுநிலையான பார்வையாளரை நியமித்து, வெளிப்படையான முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தி காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதை கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.