உள்ளாட்சி தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சி திருப்பு முனையை ஏற்படுத்தும் - மாநில பொது செயலாளர் நெல்லை ஜீவா பரபரப்பு பேட்டி!
லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை சதாம் தலைமை தாங்கிய இக்கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கண்ணன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். மேலும், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கட்சியை பூத் வாரியாக பலப்படுத்துவது குறித்தும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில மற்றும் மாவட்டச் செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா கூறியதாவது:-
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு கடந்த 100 நாட்களாகத் தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 73 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இணையம் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை மூலமாகப் பலர் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
விரைவில் தமிழகத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்யக்கூடிய உண்மையான எதிர்க்கட்சியாக எங்களது கட்சி மாறும். தலைவர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் தமிழகத்தில் மிகப்பெரிய திட்டங்களைக் கொண்டு வருவதற்காகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாடுபட்டு வருகிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு இடைத்தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை; நாங்கள் இதில் போட்டியிடவில்லை, அதற்கு நாங்கள் தற்பொழுது தயாராகவில்லை. இருப்பினும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காண்போம் என்று எங்கள் தலைவர் அறிவித்துள்ளார். அந்த இலக்கை நோக்கியே எங்களது களப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
திருச்சியில் கூடிய விரைவில் பிரம்மாண்டமான மாநாடு அறிவிக்கப்பட உள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இம்மாநாட்டின் இடமும் தேதியும் எங்கள் தலைவரால் விரைவில் அறிவிக்கப்படும். மாநாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட மிக முக்கியமான திட்டங்கள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இதுவரை இரண்டு திராவிடக் கட்சிகள் ஆண்டு வந்துள்ள நிலையில், அவற்றுக்கு மாற்றாகப் புதியவர்கள் வருவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதுள்ள ஆட்சியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லாக்-அப் மரணங்கள், பாலியல் தொல்லைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. த.வெ.க. நிர்வாகிகளே வெட்டிப் படுகொலை செய்யப்படும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சியில் என்ன நடந்ததோ, அதே நிலைதான் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கான கேள்விக்குறி எழுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என தெரிவித்தார்.