திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் - மாநில செயலாளர் பாஸ்கரன் பங்கேற்பு!

MsdMsd
Sep 28, 2026 - 20:40
Sep 28, 2026 - 20:41
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் - மாநில செயலாளர் பாஸ்கரன் பங்கேற்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் அக்டோபர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தொட்டியம் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான பாஸ்கரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில், வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கூறியதாவது:-

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் அக்டோபர் 10ஆம் தேதி, சென்னை தீவுத்திடலில் ‘மாணவர் குரல்’ என்ற பெயரில் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே இந்தியாவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களுடன் ராகுல் காந்தி நேரடியாக கலந்துரையாடி, மாணவர்களின் பிரச்சினைகள், குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறியும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்பதே நோக்கம்.

மாணவர்கள் தங்களது கேள்விகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை ராகுல் காந்தியிடம் நேரடியாக தெரிவிப்பதற்கும், அவருடைய கருத்துகளை கேட்பதற்கும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பாக அமையும். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி. மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுடன் கலந்துரையாடும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி வடக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் மற்றும் லால்குடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . இதற்காக மாணவர்கள் நேரடியாகப் பதிவு செய்து கொள்வதற்கான கியூஆர் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் நேரடியாக தங்களது பதிவை மேற்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக மாணவர்களிடம் தகவலை கொண்டு சேர்ப்பது மற்றும் அதிகளவில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்வது தொடர்பாக இன்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.