உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சியில் காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் – 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
உலக இதய தினத்தை முன்னிட்டு, திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் 11-வது ‘காவேரி மாரத்தான்’ போட்டி நடைபெற்றது. இதில் 7,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தானில் 21.1 கி.மீ. அரை மாரத்தான், 10 கி.மீ. சேலஞ்ச் ரன் மற்றும் 5 கி.மீ. ஃபன் ரன் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என பல்வேறு வயதினரும் பங்கேற்றனர். 21.1 கி.மீ. அரை மாரத்தானை காவேரி மருத்துவமனை திருச்சி செயல்பாட்டு இயக்குநர் அன்புச்செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 கி.மீ. சேலஞ்ச் ரன்னை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன், தொடங்கி வைத்தார். 5 கி.மீ. ஃபன் ரன்னை திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ். கிருத்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ஜி.சி. கோபிநாத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பி. அகல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் பேசுகையில்,
“காவேரியின் பயணத்தில் திருச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எங்கள் மருத்துவமனை தொடங்கிய இடமும் இதுதான். திருச்சியில் காவேரி மாரத்தான் 11-வது ஆண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு வயதினரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றிருப்பது ஊக்கமளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வை நோக்கி மக்கள் திரும்பி இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமையான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை ஒன்றிணைக்கும் தளமாக காவேரி மாரத்தான் உருவாகியுள்ளது,” என்றார்.
இந்த மாரத்தான் நிகழ்வு உடற்பயிற்சி, இதயப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.