விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு; இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத பார்க்கவகுல சங்கத்தினர் கோரிக்கை மனு!

MsdMsd
Sep 28, 2026 - 16:53
Sep 28, 2026 - 16:54
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு; இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத பார்க்கவகுல சங்கத்தினர் கோரிக்கை மனு!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் முதுவத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல் மற்றும் சாதி ரீதியான அவதூறுகளைப் பரப்பும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை எம்.ரவி தலைமையிலான, கிராம மக்கள் ஒன்றிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

முதுவத்தூர் கிராமத்தில் கடந்த செப்.16 அன்று காவல்துறை அனுமதி பெற்று பார்க்கவ குல மக்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் உரிய அனுமதி பெறாமல் சிலையை பிரதிஷ்டை செய்தனர். சுமூகமாகச் செல்ல விரும்பிய எங்களிடம் நேரம் கடத்தப்பட்டு, இரவு 10 மணியளவில் எங்களது பிரதிஷ்டை இடத்தில் அதிகப்படியான வெடிகளை வெடித்து கலாட்டா செய்ததில் இரு பெண்கள் லேசான காயமடைந்தனர்.

மேலும், சுமார் 30 பேர் கொண்ட கும்பல் எமது இளைஞர்களைத் தாக்கியது. அடுத்த நாள் (செப். 17) கல்லக்குடி செல்லும் வழியில் எமது சமுதாய இளைஞர் ரகுபதி என்பவர் சவுந்தர், பார்த்திபன், ஆகாஷ், அஜித் ஆகிய நான்கு பேரால் வழிமறிக்கப்பட்டு இரும்பு ராடுகளால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், நியாயம் கேட்கச் சென்ற உறவினர் செல்வக்குமார் என்பவரும் அரிவாளால் வெட்டப்பட்டு விரல்கள் சேதமடைந்தன.

குறிப்பிட்ட சில சமுதாயத் தலைவர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததுடன், பார்க்கவ குல மக்களை அவமதிக்கும் வகையில் ஆதிக்கச் சாதி எனக் கூறி ஊடகங்களில் அவதூறுகளைப் பரப்பி வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் வனத்துறை அனுமதியின்றி வேட்டை நாய்களைப் பயன்படுத்தி இரவில் மிருகங்களை வேட்டையாடி வருவதாகவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மேலும், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்ற பார்க்கவ குலப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடையோரை உடனடியாகக் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சக்திகளை அரசும் காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.