தெற்கு ரயில்வே மற்றும் PABT இணைந்து திருச்சியில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் பசுமைத் திட்டம் தொடக்கம்!

MsdMsd
Oct 9, 2026 - 13:08
Oct 9, 2026 - 13:12
தெற்கு ரயில்வே மற்றும் PABT இணைந்து திருச்சியில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் பசுமைத் திட்டம் தொடக்கம்!

இந்தியாவின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், ‘பிளான்ட் ஏ பில்லியன் ட்ரீஸ்’ (PABT)அமைப்பு சார்பில், தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்டத்துடன் இணைந்து தூய்மைப் பணியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில்வேயில் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய தூய்மை இயக்கம் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி ரயில்வே கோட்டத்தில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று தூய்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரயில் நிலைய நுழைவாயிலில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், PABT அமைப்பின் நிறுவனர் சைலேந்திர சிவகுமார், ரயில்வே ஊழியர்கள், திருச்சி நேஷனல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி கூறியதாவது:-

ரயில்வேயில் தூய்மைப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒரு மாத கால இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மரக்கன்றுகள் நடும் பணி முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். திருச்சி ரயில்வே கோட்டத்துடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள PABT அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ஒரு மாத காலத்தில் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்படும். இந்த முயற்சி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக ரயில் பயணிகளிடமும் நேரடியாகக் கருத்துகள் கேட்கத் திட்டமிட்டுள்ளோம். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளிடம் கருத்துகள் பெறப்படும். தூய்மைப் பணிகளுக்குப் பிறகு, ரயில் நிலையங்களும் ரயில்களும் எந்த அளவுக்குத் தூய்மையாக உள்ளன, மேலும் என்னென்ன மேம்பாடுகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அவர்களிடம் கருத்துகள் கேட்டறியப்படும் என்றார். 

இத்திட்டம் குறித்து PABT அமைப்பின் நிறுவனர் சைலேந்திர சிவகுமார் கூறுகையில்:-

தெற்கு ரயில்வேயுடன் இணைந்துள்ள 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒரு முக்கியமான தொடக்கமாகும். எங்களது இலட்சியம் இதையும் கடந்து மிகப் பெரியது. தெற்கு ரயில்வே போன்ற நிறுவனங்களுடனான கூட்டாண்மை, பெரிய, நிலையான பசுமை மண்டலங்களை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்கு குறிக்கோளை முனைப்புடன் செயல்படுத்த உதவும். எங்கள் கவனம் நடப்படும் மரங்களின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்திருக்காது; மாறாக அவைகளை வளர்த்து, பாதுகாத்து, சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் சூழல் அமைப்புகளின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதில்தான் உள்ளது. எனவே, திருச்சிராப்பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகள் ஒரு மிகப் பெரிய தேசிய இயக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள படிநிலையாகும் என தெரிவித்தார்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஒத்துழைப்பு கூட்டாண்மை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி ரயில்வமரக்கன்றுகள் நடப்பட்டன. தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், தூய்மைப் பணியுடன் இணைக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இது மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற தூய்மை ஆகியவற்றை ஆதரிப்பதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமைந்துள்ளது. 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ரயில் நிலையங்கள், ரயில்வே துறை பணியாளர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள், அலுவலக வளாகங்கள் மற்றும் ரயில்வேக்குச் சொந்தமான பிற பொருத்தமான இடங்களில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடும் நோக்கில் இந்தக் கூட்டாண்மைச் செயல் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மரங்கள் நடுவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிவதிலும், இச்செயல்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதிலும் பிஏபிடி (PABT) அமைப்பு முழுமையாக உதவுகிறது. தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை வளர்த்துப் பராமரிக்கும் PABT-ன் மாபெரும் சுற்றுச்சூழல் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய தொடக்கமாக இத்திட்டம் அமைகிறது. மரக்கன்றுகளை நடுவதோடு நின்றுவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரித்து, பாதுகாப்பான வளர்ச்சியை உறுதி செய்வது வரை PABT அமைப்பின் பணி தொடர்கிறது.

ஒருமுறை செய்யும் நடவடிக்கையாகக் கருதாமல், ஆரோக்கியமான பசுமை மண்டலங்களை உருவாக்குவதே இவர்களின் இலக்காகும். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து நீண்டகால நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்க PABT அமைப்பு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்கள் மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கான முன்னெடுப்புகளில் பங்கேற்க வழிவகை செய்யப்படுகிறது.