கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தேர்வு எழுதி நேர்காணல் முடித்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு!

MsdMsd
Oct 13, 2026 - 10:51
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தேர்வு எழுதி நேர்காணல் முடித்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு!

திருச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்குத் தேர்வு எழுதி, நேர்காணலையும் முடித்தவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாகப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்வர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, நாங்கள் விண்ணப்பித்துத் தேர்வு எழுதியதுடன், நேர்காணலிலும் பங்கேற்றோம். தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துள்ளது. இருப்பினும், இதுவரை பெரும்பாலான மாவட்டங்களில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை பகுதியில் மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நிர்வாகக் காரணங்கள், தேர்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி பணி நியமனம் தள்ளிப்போடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகச் சென்னைக்கும் திருச்சிக்கும் அலைந்து திரிந்து அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறோம். சென்னையில் உள்ள அதிகாரிகள், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தை அணுகுமாறு கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டால், மேலிடத்திலிருந்து உத்தரவு வர வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். இதனால், எங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே, கிராம உதவியாளர் பணிக்கான அரசாணையைப் புதிதாக வெளியிட வேண்டும் அல்லது ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையைத் திருத்தி, பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழும் தகவல் கோரியுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு எங்களது பணி நியமன நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, 40 வயதைக் கடந்துவிட்டால் அடுத்த தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். எங்களது வயது மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வருவாய்த் துறையில் கடைநிலைப் பணியாகக் கருதப்படும் கிராம உதவியாளர் பணிக்காவது எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், எங்களது வாழ்வாதாரம் மேம்படும். எனவே, தமிழக அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.