கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஆதரவு; பாஜக சார்ந்த அணிக்கு வாக்களிக்க மாட்டோம் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு!

MsdMsd
Mar 28, 2026 - 23:09
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஆதரவு; பாஜக சார்ந்த அணிக்கு வாக்களிக்க மாட்டோம் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு!

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் பிரதிநிதி காவிரி தனபால் உட்பட 20 விவசாய அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டியக்கத்தின் பிரதிநிதி காவிரி தனபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- மரபணு மாற்றுப் பயிரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு 100% வரியும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய வேளாண்மை சார்ந்த பொருளுக்கு 25 சதவீதம் வரியையும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சலுகை மின்சாரத்தை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 21 லட்சம் மின் இணைப்புகளுக்கு எதிரான சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாநில அரசு வழங்கும் நிதிகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. போர் பதற்றத்தில் கூட இந்தியாவின் பொருளாதாரத்தை சரிவில்லாமல் வைத்திருப்பது உழவர்கள் தான். இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வேளாண் பொருட்கள் அனைத்தையும் வீழ்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஜீரோ வரி என்கிற வகையில் வெளிநாட்டு வேளாண் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போது நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. வேளாண்மை கூட்டுறவு கடன்களில் வட்டி சலுகை அளிப்பது உள்ளிட்ட 68 கோரிக்கைகளை அரசியல் கட்சிகளிடம் முன் வைத்துள்ளோம். எந்த கட்சி எங்களுடைய கோரிக்கையை முழுமையாக ஏற்று கொள்கிறதோ, அந்த கட்சிக்கு வரும் தேர்தலில் எங்களது ஆதரவை தெரிவிப்போம். மேலும் பாஜக சார்ந்த அணிக்கு வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்தார்.