திருச்சி ஆவின் பால் பண்ணையில் புதிய வகை பால் மற்றும் ஐஸ்கிரீம் அறிமுகம் - அமைச்சர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து வைத்தார்!

MsdMsd
Oct 15, 2026 - 19:22
திருச்சி ஆவின் பால் பண்ணையில் புதிய வகை பால் மற்றும் ஐஸ்கிரீம் அறிமுகம் - அமைச்சர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து வைத்தார்!

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில், நுகர்வோர்கள் மற்றும் முகவர்களுக்கான புதிய அரை லிட்டர் ஃபுல் கிரீம் (FCM 500 ml) பால் மற்றும் கேண்டி ஐஸ் கிரீம் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னச்சாமி கலந்து கொண்டு புதிய வகை பாலையும், ஐஸ் கிரீமையும் அறிமுகம் செய்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஆவின் நிலைய மேலாளர் (பொறுப்பு) சுந்தர வடிவேல், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி சின்னச்சாமி கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் அரை லிட்டர் ஃபுல் கிரீம் பால், மேங்கோ கேண்டி ஐஸ் கிரீம் மற்றும் ரூ. 5 மதிப்பிலான தயிர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இருந்த பால் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் தற்போது முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கொள்முதல் விலை உயர்வுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு முழுமையாக ரூ. 44 வழங்கப்பட்டு வருவதோடு, இன்சூரன்ஸுக்காக ரூ. 1 மட்டும் பிடிக்கப்படுகிறது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அனைத்து விவசாயிகளும் ஆவினை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளின் விற்பனை இலக்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும், தீபாவளி பண்டிகையின்போது ஆவின் பால் பொருட்களின் விலை உயர வாய்ப்பில்லை. ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.