ஶ்ரீரங்கத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; குப்பையில் கிடந்த தங்க நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்!

MsdMsd
Oct 21, 2026 - 19:46
ஶ்ரீரங்கத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; குப்பையில் கிடந்த தங்க நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் 2-வது வார்டு வடக்கு சித்திர வீதி பகுதியில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பரமேஸ்வரியும், ஓட்டுநர் செல்வேந்திரனும் வழக்கம் போல இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்து வந்துள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் தனது வீட்டு குப்பையை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கியுள்ளார். அவர் வழங்கிய குப்பை குவியலில் எதிர்பாராதவிதமாக ஐந்து பவுன் தங்க நகையும் தவறி விழுந்துள்ளது. குப்பையை தரம் பிரிக்கும் பணியின் போது இதனை கண்டறிந்த தூய்மைப் பணியாளர்கள் பரமேஸ்வரி மற்றும் செல்வேந்திரன் ஆகியோர், எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அந்த நகையின் உரிமையாளரான சுசீலாவை தேடி சென்று அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். தெரியாமல் குப்பையில் போன தங்க நகையை துரிதமாகவும் மனிதநேயத்துடனும் மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர்களின் இந்தச் செயலை அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.