முதல்வர் குறித்து அவதூறாக பேசுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி!
அரிசி விலை குறைய வேண்டும் என்பதற்காகவே ரூ.30-க்கு அரிசி விற்பனைத் திட்டம் - அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி.
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கிடங்குகளைத் திறப்பதற்காக இன்று வந்துள்ளேன். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மணிகளைப் பாதுகாப்பதற்காகத் தார்ப்பாய்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நிலுவையில் இருந்த புதிய கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த பத்து நாட்களாகச் செய்யாறு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய கிடங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று புதுக்கோட்டையிலும் கிடங்குகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன. மக்களுக்கு இந்த அரசு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும். ரேஷன் கார்டுகளைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அனைத்தும் ஒரே வண்ணத்தில் வழங்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில் கார்டுகள் வழங்கப்படுவதில்லை. பி.எச்.எச், எம்.பி.எச்.எச் உள்ளிட்ட வகையான கார்டுகள் உள்ளன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தேவையில்லை என்றால், நோ கமாடிட்டி கார்டு பெற்றுக்கொள்ளலாம். அமைச்சரான பிறகு நானே தற்போது அத்தகைய கார்டைப் பெற்றுள்ளேன். முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ரேஷன் அரிசியைச் சாப்பிட்டதாகக் கூறியிருந்தனர். அவர்கள் ஏழு முறை, பத்து முறை அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. ஆனால், நான் மட்டும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தங்களது ஆட்சியில்தான் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு கூறியது குறித்த கேள்விக்கு:- அனைவரும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், செயல்பாடு என்பது ஒன்றுள்ளது. எங்கள் அரசு பேசுவதைவிடச் செயல்பாட்டில் பல்வேறு விஷயங்களைச் செய்து காண்பிக்கும். அதைச் செயல்பாட்டில் பார்ப்பீர்கள். கூட்டுறவுப் பண்டக சாலைகளிலும் அமுதம் அங்காடிகளிலும் கிலோ ரூ.30-க்கு அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரிசி விற்பனைக்குக் கொண்டுவரப்படும். அரிசியின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் அரிசி விலை கண்டிப்பாகக் குறையும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும் என நம்புகிறோம்.
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பி, எதிர்பார்த்து வாக்களித்து இந்த அரசை அமைத்துள்ளனர். முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் அன்புடன் வரவேற்றுள்ளனர். முதல்வர் குறித்து அவதூறாகப் பேசுபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.