அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழக முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்; தற்போதைய சூழலில் தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை பெற்றவராக விஜய் இல்லை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பேட்டி!

MsdMsd
Mar 29, 2026 - 21:32
Mar 29, 2026 - 21:34
அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழக முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்; தற்போதைய சூழலில் தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை பெற்றவராக விஜய் இல்லை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பேட்டி!

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி மன்னார்புரம் பகுதியில், மாநிலத்தலைவர் அப்துல் கரீம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் இப்ராஹிம், மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ் சுலைமான் மற்றும் தமிழகம், பாண்டிச்சேரி, காரைக்கால், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கிடையே மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:--

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக "அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" எனும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10 மாதத்திற்கு நடத்த உள்ளோம். இதன் மூலம் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆளும் வடமாநிலங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ, சிறுபான்மையினர், தலித் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற ஒரு தீய நோக்கத்தோடு தமிழகத்திலும் பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் என்ன நிலை உள்ளதோ, அந்த நிலைதான் தமிழ்நாட்டிற்கும் ஏற்படும். எனவே பாஜக ஆட்சி செய்வதற்கு வழிவக்கக்கூடிய வகையிலான அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழக முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் ஆட்சியைப் பிடிப்பேன் என கூறுகிறார். அவரது அன்றாட செயல்பாடுகளை பார்க்கும் பொழுது, தற்போதைய சூழலில் தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை பெற்றவராக விஜய் இல்லை. அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை. முழுமையான அரசியல்வாதியாக இன்னும் அவர் மாறவில்லை. நேரடியாக முதல்வராக வருவேன் என கூறும் அவர் அதற்குரிய ஆக்கப்பூர்வமான பிரச்சாரங்கள் மற்றும் செயல் திட்டங்களை முன்னெடுக்கவில்லை. தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படும் பொழுது, அதற்கு குரல் கொடுக்க இயலாத நபராக உள்ளார். ஜனநாயக படம் ரிலீஸ் ஆவதற்கு தடையாக பாஜக இருப்பது குறித்து கூட அவர் வாய் திறக்காமல் உள்ளார். திருப்பரங்குன்றம் விவாகரத்திலும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தார். அமைதியாக இருப்பது எப்படி அரசியலாகும்.

ஈரான் - இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்க தவறிவிட்டது. தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பிரச்சனைகள் வரும் பொழுது ஜனநாயக நாடாக இருக்கக்கூடிய இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் அல்லது அமைதியாக இருக்க வேண்டும். எந்த தரப்பின் கோபத்திற்கும் ஆளாகாமல் ராஜதந்திரத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் பிரச்சனை பெரிதாகும் நேரத்தில் இந்திய பிரதமர் இஸ்ரேல் சென்று அங்கு உறவாடி உள்ளார். ஈரான் போரின் போது இந்திய மக்கள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். அதனை நினைவுகூர்ந்து ஹார்மோஸ் ஜலசந்தியை எந்தவித நிபந்தனையின்றி இந்தியாவிற்கு ஈரான் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களின் வாக்கு தேவை என நினைக்கும் அரசியல்வாதிகள், அடிப்படை பிரச்சனைகளை கவனம் செலுத்துவதில்லை. முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனை ஐந்து சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், அல்லது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு தகுந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.