விஜய்யை டெபாசிட் இழக்க வைப்போம் - திருச்சியில் இனிகோ பேட்டி!

MsdMsd
Mar 29, 2026 - 22:35
Mar 29, 2026 - 22:36
விஜய்யை டெபாசிட் இழக்க வைப்போம் -  திருச்சியில் இனிகோ பேட்டி!

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு இனிகோ இருதயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இனிகோ இருதயராஜ் கூறுகையில்:-

திருச்சியில் மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி ஐந்தாண்டுகள் மக்கள் பணி ஆற்றியுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை தைரியமாக, தெம்பாக, ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்த்துள்ளோம். கண்டிப்பாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலை இல்லை. அவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். ஒரு கட்சியினுடைய தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும் திராணியும் இல்லாதவர். மக்கள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள். தற்போது தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். காலை உணவு திட்டம் தமிழக முதல்வரின் கனவில் வந்த திட்டம். இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயை டெபாசிட் இழக்க வைப்போம் என தெரிவித்தார்.